திருநின்றவூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய பாதாம் பருப்பில் புழு! - திருவள்ளூர்
Published : Mar 2, 2024, 9:27 PM IST
திருவள்ளூர்: வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (30) என்பவர், எலக்ட்ரீஷ்யனாக பணியாற்றி வருகிறார். இவர் வேலை செய்து கொண்டிருந்த போது, தனது மகளுக்கு பாதாம் பருப்பு வாங்குவதற்காக திருநின்றவூர் அடுத்த நெமிலிச்சேரியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டுக்கு தனது உதவியாளர் நிரஞ்சன் என்பவரை அனுப்பி வாங்கி வர கூறியுள்ளார்.
அங்கு சென்ற அவரது உதவியாளர், 440 ரூபாய் கொடுத்து பாதாம் பருப்பு பாக்கெட்டை வாங்கி வந்து, அரவிந்திடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அதை பிரித்துப் பார்த்து போது, பாதம் பருப்பில் புழு இருந்ததைக் கண்டு அரவிந்த் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அந்த சூப்பர் மார்கெட்டுக்குச் சென்று, அங்கிருந்த மேலாளரிடம் கேட்ட போது, அவர் தகாத வார்த்தைகள் பேசி அசிங்கப்படுத்தியதாகவும், அங்கு பணி செய்யும் உதவியாளர்களைக் கொண்டு வெளியே தள்ளி மிரட்டியதால், அரவிந்த் மன உலைச்சள் ஏற்பட்டு, திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், கவனமில்லாமல் தரமற்ற உணவுப் பொருட்களை விற்றது, தன்னை அவதூறாக பேசி அசிங்கப்படுத்திய சூப்பர் மார்க்கெட் மேனேஜர் மற்றும் இரண்டு பெண் உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பாதாம் பாக்கெட்டில் புழு இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.