செம பசி பாஸ்..! அரிசியுடன் பிளாஸ்டிக் கவரை சாப்பிட்ட யானை வீடியோ! - ELEPHANT EAT PLASTIC COVER
Published : Oct 17, 2024, 2:25 PM IST
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம், செம்மேடு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக இரண்டு ஆண் காட்டு யானைகள் சுற்றி வந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் அரிசியை சாப்பிட்டு வந்தது.
மேலும், யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக அப்பகுதி விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு நரசிபுரம் அருகே உள்ள செம்மேடு கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை, ஊருக்கு நடுவே உள்ள மளிகை கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி மூட்டையை எடுத்து கீழே கொட்டி சாப்பிடுள்ளது. இதில், அரிசி மூட்டை இருந்த பிளாஸ்டிக் கவரையும் யானை சாப்பிட்டுள்ளது. இதனைப்பார்த்த குடியிருப்பு வாசிகள் பிளாஸ்டிக் கவரை சாப்பிடாதே, அரிசியை மட்டும் சாப்பிடு, பொறுமையாக சாப்பிடு, போ சாமி என கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.