தருமபுரி: ஒகேனக்கல் காவரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு! - Hogenakkal Water Flow Increased - HOGENAKKAL WATER FLOW INCREASED
Published : May 27, 2024, 3:26 PM IST
தருமபுரி: கர்நாடகா மாநில காவிரி கரையோர பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த அணைகளில் இருந்து சுமார் 787 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அடுத்து அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு வாரங்களாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும் நிலையில், தற்போது கர்நாடகா மாநில அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் மழைநீர் ஆகியவை ஒன்று சேர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (மே 26) மாலை வரை காவிரி ஆற்றின் நீர்வரத்து 1500 கன அடியாக இருந்தது, இன்று (மே 27) காலை 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக தற்போது ஒகேனக்கல் அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இதற்கு முன்னதாக, நேற்று (மே 26) ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால், வெளி மாவட்டங்களைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் அதிகமாக குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.