“மீண்டும் பள்ளிக்கு போகலாம்..” 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்! - Vembarpatti School alumni meet
Published : Sep 1, 2024, 10:32 PM IST
திண்டுக்கல்: நத்தம் அருகே வேம்பார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1974ஆம் ஆண்டுகளில் 10ஆம் வகுப்பில் படித்த 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 50 வருடங்களுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் தங்களது மகன், மகள், பேரன், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தாருடன் வந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
இங்கு படித்த மாணவர்கள் பல்வேறு ஊர்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துக் கொண்டதால், ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தைப் பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர், பள்ளிக்கு 25 சிசிடிவி கேமரா அமைக்க தலைமையாசிரியர் கோரிக்கை விடுத்ததையடுத்து, முன்னாள் மாணவர்கள் இணைந்து அதற்கான மொத்த தொகையையும் அளித்தனர். மேலும், இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சித்திரை 1ஆம் தேதி முன்னாள் மாணவர் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தநிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.