நைரோபி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் அதாவது, இந்திய மதிப்பில் 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக கெளதம் அதானியுடன் போடப்பட்டிருந்த, பல மில்லியன் டாலர் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்ததாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.
அதிபர் வில்லியம் ரூட்டோ பாராளுமன்றக் குழுவிடம் ஆற்றிய உரையில், "எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் கூட்டு நாடுகள் வழங்கிய புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார். ஆனால், அவர் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடவில்லை.
இதையும் படிங்க: "நிஜ்ஜார் கொலை குறித்து கனடா ஊடகம் வெளியிட்ட அபத்தமான செய்தி"-இந்திய வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு!
அதானி குழுமம் கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் கூடுதல் ஓடுபாதை மற்றும் நவீனமயமாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதற்கு பதிலாக, விமான நிலையத்தை அதானி குழுமம் 30 ஆண்டுகளுக்கு குத்தகை எடுக்க திட்டமிட்டிருந்தது. அதனை கென்யா ரத்து செய்துள்ளது.
அதானி குழுமத்தின் மீது அமெரிக்க வல்லுநர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சட்டி குற்றப்பத்திரிகையை வெளியிட்டதை தொடர்ந்து, கென்யா விமான நிலைய ஒப்பந்த விவகாரம் பேசு பொருளாக மாறியது. இது கென்யாவில் அதானிக்கு எதிரான எதிர்ப்புக்களையும், விமான நிலைய ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையும் தூண்டியது. இதனால் அங்கு பணி சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என அச்சுறுத்தல் நிலவியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு ஆப்பிரிக்காவின் வணிக மையமான கென்யாவில், மின் கடத்தும் பாதைகளை அமைப்பதற்கான ஒப்பந்தமும் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் கென்யாவின் பங்கில் ஊழல் எதுவும் இல்லை என்று பாராளுமன்றக் குழுவிடம் வில்லியம் ரூட்டோ உறுதி படுத்தியுள்ளார்.
மேலும், இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், '' லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட பிறகு, கென்யா விமான நிலையம் அதானி குழுவுடனான மின் பரிமாற்ற ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. இது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது தான், இன்று நடந்துள்ளது. அதானி குழுமத்துடனான பிரதமரின் நீண்டகால உறவு உலகளவில் நன்கு அறியப்பட்டதாகும். வெளிநாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு பொருளாதார நலன்களில் இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்