ஈரோடு: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 92வது பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்ட ஆசனூர் மலைப்பகுதியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சென்னியப்பன் தலைமையில் பொது மருத்துவ முகாம் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 21) நடைபெற்றது.
இந்த முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம், இதுவரை 2 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் சேவையை பாராட்டி ஐநா சபை நமக்கு விருது வழங்கியுள்ளது.
சாதனைத் திட்டம்
உலகளவில் மக்கள் இருக்கும் இடம் தேடி மருத்துவம் அளிக்கும் இந்த திட்டத்தின் மக்கத்துவததை அறிந்து, ஐநா தனது உச்சப்பட்ச விருதான 'ஐநா விருது' வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக 12,317 பேர் 'லோடிங் டோஸ்' மாத்திரைகளால் மாரடைப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நவம்பர் 29ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மேலும் 2 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருந்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: “ம்ம்.. சாப்பிட்டேன்.. தண்ணீ குடிச்சுட்டேன்.. தலையை அசைத்து மருத்துவருக்கு பதிலளித்த திருச்செந்தூர் தெய்வானை யானை!
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் 2023ஆம் ஆண்டில் தவறான அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் திமுக ஆட்சியில் மாரடைப்பிலிருந்து மீண்டு உயிர் காக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,317 என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இந்த எண்ணிக்கையே இந்த திட்டத்தின் சாதனையாகும்.
அரசின் திட்டங்களால் காக்கப்பட்ட மக்கள் உயிர்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பெருமகனாரின் 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு - தாளவாடி - அரேப்பாளையம் மலைவாழ் மக்களுக்காக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் மாபெரும் மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/qOQp1yKCcJ
— Subramanian.Ma (@Subramanian_ma) November 21, 2024
இது போன்ற 10க்கும் மேற்பட்ட மருத்துவ திட்டங்களின் வாயிலாக மக்கள் பயனடைந்து வருகிறார்கள். தாளவாடி மலைப்பகுதிக்கு கடந்த முறை நான் வந்தபோது, பிரேத பரிசோதனை செய்ய ஆய்வுக்கூடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில், முதலமைச்சரின் ஆலோசனைபடி தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடற்கூராய்வு செய்ய ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தாளவாடி மலை கிராமங்களில் 99 விழுக்காடு மக்களை சென்றடைந்துள்ளது என மக்கள் கூறுகின்றனர்," என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை தலைவர் சு.முத்துச்சாமி, திராவிட கழக பொதுச் செயலாளர் அன்புராஜ், திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்