திருநெல்வேலி: 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள மேலப்பாளையம் திரையரங்கில், அதிகாலை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத நல்லிணக்கத்திற்குப் பாதகம் விளைவிப்பதாக மேலும் ஒரு பிரிவின் கீழ் வழக்கு சேர்க்கப்பட்டு ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்றொரு நபரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமாஸ் தியேட்டரில் நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலை அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் திரையரங்கு வளாகத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வெடி பொருட்கள் சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வெளியான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, தென்மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு வ், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது, இதில் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அமரன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டுக்குள் திடீரென வந்த கணவன்.. மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்..!
தற்போதும் இந்த சம்பவத்தில் பிடிபட்டவர்களைத் தவிர வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் ரசின் என்பவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், ஒருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவரது செல்போன் அழைப்புகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மூன்றாவது நபர் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வெடி பொருட்கள் சிறப்புச் சட்டத்தின் கீழ் மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக மற்றொரு வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக யார்? எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை போலீசார் இன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.