அன்னையர் தினம்: கொங்கு மண்ணில் 'வள்ளி கும்மியாட்டம்' ஆடிய இளம்பெண்கள் - Valli Kummiyattam - VALLI KUMMIYATTAM
Published : May 13, 2024, 10:58 AM IST
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் அப்பகுதி மக்களின் வாழ்வுடன் இணைந்ததாக காணப்படும். அதுபோல, கொங்கு மண்டலத்தில் 'வள்ளி கும்மியாட்டம்' நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய கலையாக இருக்கிறது.
அழிவின் விளிம்பில் இருக்கும் இக்கலையை மீட்டு அடுத்தத் தலைமுறைக்கு கடத்தி செல்ல லாப நோக்கமின்றி வள்ளி கும்மி நடனம் பயிற்றுவிக்கும் கலைக் குழுக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இயங்கி வருகின்றன.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அடுத்த முதலிபாளையம் பகுதியில் இயங்கி வரும் கந்தவேலன் கலைக்குழு என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் வள்ளி கும்மி பயிற்சி பெற்றுவரும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் அரங்கேற்றம் செய்தனர்.
இதனை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். மேலும் அன்னையர் தினத்தை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்வில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் தங்களது அன்னையருடன் இணைந்து வள்ளி கும்மி நடனமாடினார். ஒரே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற பெண்கள் கிராமிய பாடல் இசைக்கு ஏற்ப ஒரே மாதிரியான நடன அசைவுகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.