விமரிசையாக நடைபெற்ற திருவையாறு நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்! - Nandi Peruman Thirukalyanam
Published : Mar 19, 2024, 3:44 PM IST
தஞ்சாவூர்: திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நந்தியம் பெருமான் பிறப்பு விழா மற்றும் நந்தியம் பெருமான் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நந்தியம் பெருமான் பிறப்பு விழா நேற்று தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, பட்டாபிஷேகம் இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லாக்கிலும், நந்தியம் பெருமான் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வான வேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் இருந்து புறப்பட்டு, தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி, அரியலூர் மாவட்டம் திருமழபாடிக்கு திருக்கல்யாண வைபோகத்திற்காகச் செல்கின்றனர்.
திருமழாப்பாடியில் இன்று இரவு வைத்தியநாதன் சுவாமி கோயிலில் நந்தியம் பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர்.