மாசி அமாவாசை; பாலக்கரை ஆஞ்சநேயருக்கு 10,008 வாழைப்பழங்களால் சிறப்பு அலங்காரம்!
Published : Mar 10, 2024, 5:41 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு, அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், தேவையான அளவிற்கு நல்ல மழை பெய்து, நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் கடும் வெப்பம் தணிய வேண்டியும், மாசி மாத அமாவாசை தினமான இன்று 10 ஆயிரத்து 8 எண்ணிக்கையிலான பூவன், ரஸ்தாளி, பேயன், செவ்வாழை, தேன்கதளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட பலவகை வாழைப் பழங்களைக் கொண்ட அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும், ஆயிரத்து ஒரு முறை இராம நாமமும் கூற, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குங்குமம் மற்றும் உதிரிப்பூக்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்த பிறகு, அலங்கார தீ ஆர்த்தி மற்றும் பஞ்சார்தியும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த கோயிலில் உள்ள ஆஞ்சநேய சுவாமியிடம் தங்களது வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதி, அதனை மட்டை தேங்காயுடன் சிவப்பு நிறத்துணியில் கட்டி, அமாவாசை பூஜையில் வைத்து பிராத்தனை மேற்கொண்டால் எண்ணிய காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.