தஞ்சாவூர்: தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை.. பாரம்பரிய வரவேற்புடன் அசத்திய தனியார் அறக்கட்டளை!
Published : Oct 26, 2024, 4:23 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஜோதி தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் விளார் ஊராட்சி மற்றும் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் பணிபுரியும் சுமார் 25 தூய்மை பணியாளர்களின் இல்லத்துக்கு நேரில் சென்று அவர்களை வாகனத்தில் துணிக்கடைக்கு அழைத்து சென்றனர். கடையில் சந்தனம், குங்குமம், வெற்றிலை பாக்குடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த கடையில் தூய்மை பணியாளர்கள் விரும்பிய புத்தாடைகளை வாங்கி கொடுத்து ஆச்சரியப்படுத்தினர்.
மேலும் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறி ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது. இது குறித்து தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் கூறுகையில், "தூய்மை பணியாளர்கள் செய்யும் மகத்தான பணியை போற்றி அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த தீபாவளிக்கு அவர்களுக்கு புதுத்துணியை வழங்கியுள்ளோம். மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் நாங்கள் மனமகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.