வைத்தீஸ்வரன் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு! - மயிலாடுதுறை செய்திகள்
Published : Feb 6, 2024, 8:54 AM IST
மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு, செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம், நேற்று (பிப்.5) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் (Vaitheeswaran Koil) தேவாரப்பாடல் பெற்ற, ஸ்ரீ தையல்நாயகி உடனாகிய ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் முருகபெருமான், வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு ஆண்டுதோறும் தை மாத செவ்வாய் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தை செவ்வாய் உற்சவம், கடந்த ஜனவரி 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, நாள்தோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தரிசனமும் நடைபெற்றது.
இந்நிலையில், உற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான 9 ஆம் நாள் திருத்தேர் விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து செல்வ முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி, கோயில் கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். கோயிலின் நான்கு வீதிகளை தேரில் வலம் வந்த முத்துகுமாரசுவாமிக்கு, வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து, நேர்த்திக்கடன் செலுத்தியும் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.