தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
Published : Feb 15, 2024, 11:28 AM IST
தென்காசி: தென்காசி நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் 11 நாள்கள் மாசி மகப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மாசி மகப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, கொடி மரத்திற்கு மாவுப் பொடி, திரவியம், மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், கும்பநீர் ஆகிய 11 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, கொடி மரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாசி மகப் பெருவிழாவின் முதல்நாள் விழாவான கொடியேற்ற விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில், தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி சுவாமி அம்பாள் திருத் தேரோட்டம் நடைபெறுகிறது.