திருச்சிராப்பள்ளி: பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஏழை, எளிய பள்ளி மாணவிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வித்திறன் அளித்து, உயர்கல்வியுடன் வேலை வாய்ப்பு பயிற்சிகளையும் வழங்கி, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி வழங்கும் விதமாக, அவதார் ஹியூமன் கேப்பிட்டல் டிரஸ்ட் சார்பில் 'நிபுணி' எனப்படும் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி நிர்வாக அறங்காவலர் சௌந்தர்யா ராஜேஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், ஆண்டவன் கல்லூரி செயலாளர் வெங்கடேஷ் மற்றும் கல்லூரி முதலமைச்சர் பிச்சைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பள்ளி மாணவிகள் அனைவரும் சிறப்புடன் கல்வி பயின்று நாட்டையும், வீட்டையும் மேம்படுத்துவோம் எனவும், பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டுமெனவும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
திருச்சியில் இருந்து 9 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவதார் அறக்கட்டளையின் மூலம் நிபுணி வேலை வாய்ப்பு திட்டத்தில் இணைந்துள்ள பள்ளி மாணவிகளுக்கு உதவித் தொகையையும், பயிற்சித் திட்டங்களை நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "பிரிட்டிஷார் காலத்தில் ஒரு பெண்கள் கூட பள்ளிக்கு செல்லவில்லை, ஆண்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். குறிப்பாக இந்தியாவில் 35.7 சதவீதம் மாணாக்கர் உயர்கல்வி பயிலும் நிலையில், 16.7 சதவீதம் பேர் பெண்கள் என்பது தற்போது பெருமைக்குரியதாக உள்ளது. மாணவர்களை காட்டிலும் மாணவிகளை அதிகம் கல்வி பயில்கின்றனர். அதே நேரம் மாணவர்களும் நன்கு கல்வி பயில வேண்டும்.
ஒவ்வொரு தேர்விலும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். அதேபோன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டி தேர்வுகளிலும் பெண்களே முதலில் வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு புதுமைப்பெண்கள் திட்டத்தில் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்மூலம், கல்லூரி சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 27 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் அறக்கட்டளைகள் மூலம் வழங்கப்படும் இது போன்ற வாய்ப்புகளை மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்," எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்