புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கூட்டுறவு துறை சார்பில் ஆட்சியர் அருணா தலைமையில் கூட்டுறவு வார விழா நேற்று (நவ.16) நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கடன் திட்டங்களை வழங்கினார்.
மேலும் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் அமைச்சர்கள் வழங்கினர். பின் விழா மேடையில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், “விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு கடன் உதவி வழங்கும் வகையில் இந்த கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவுத்துறை நலிவடைந்தது, கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஊதியம் வாங்காமலே பணி செய்து வந்தனர்.
தற்போது திமுக ஆட்சியில்தான் கூட்டுறவு சங்கங்களுக்கு புத்துயிர் வந்துள்ளது. கூட்டுறவு சங்கம் புத்துயிர் பெறுவதற்காக முக்கிய காரணம் கருணாநிதி தள்ளுபடி செய்த 7000 கோடி ரூபாயை கூட்டுறவு சங்கங்களுக்கான அரசு வழங்கிய கடன் ரத்தாகும்.
இதனை பார்த்து தான் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சுமார் 72, ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். தற்போது கல்வி கடனும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்,” என்றார்.
இதன் பிறகு பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் வருவாயில் மத்திய அரசு 1 ரூபாய்க்கு 27 பைசா மட்டுமே தருகிறது. இந்த நிலையிலும் உங்களால் மட்டும் எப்படி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முடிகிறது என்று ஆச்சரியத்துடன் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், அமைச்சர்களும் கேட்டு வருகின்றனர்.”
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு; தென்னக ரயில்வே விளக்கம்!
அதற்கு நாங்கள் எங்களது முதலமைச்சருக்கு மனம் உள்ளது அதனால் மார்க்கம் உள்ளது என பதிலளிக்கிறோம். இந்தியாவில் பல மாநிலங்களில் மகளிர் சுய உதவி குழு இருந்தாலும் அவைகள் பெயரளவுக்கு தான் நடந்து வருகிறது. கடன்களும், பெயரளவுக்கு தான் அந்த அரசுகள் வழங்குகிறது.”
“மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவு கடன் கொடுத்தது திமுக. அப்போது துணை முதலமைச்சராக இருந்தவர் ஸ்டாலின். நாடும், வீடும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்