திருப்பூர்: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள டெங்கு சிறப்பு வார்டில் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும் காரணத்தால், அதனால் உருவாகும் நோய்களும் அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால் வீடுதோறும் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதனால், மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காகக் கூட்டம் அதிகரிக்கிறது.
டெங்கு பாதிப்பு: அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், திருப்பூர் மாநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 7பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு மாதத்தில் மட்டும் 35 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலால், கணிசமான எண்ணிக்கையில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்: டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதற்கென அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த அணுக்கள் குறையும் என்பதால் தட்டை அணுக்களை அதிகப்படுத்தக் கூடிய உணவுகள் அளிக்கவும், அதற்கான மருந்துகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்களை நீக்கக்கூடாது - அமைச்சர் மா.சுப்ரமணியன்
ஒவ்வொரு படுக்கையிலும் கொசு வலைகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் தனித்துவமாகக் கவனிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிகிச்சை அளிக்கும் போது பாதிப்பு அதிகமாக இருந்தால் ரத்த அணுக்கள் வழங்கப்பட்டு, நோயாளிகளை குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடமாநிலத்தில் இருந்து திருப்பூர் வந்து தங்கி தொழில் செய்யக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் தான் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளர் குடியிருப்புகளில் சுகாதாரம் இல்லாமல் இருப்பது, கொசு உற்பத்தியாகக் கூடிய வகையில் தண்ணீர் தேங்கி இருப்பது போன்ற காரணங்களால் வடமாநில தொழிலாளர்களுக்கு டெங்கு பரவுகிறது. திருப்பூர் மாநகரில் மட்டும் 3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் நிலையில், அவர்களது குடியிருப்பு பகுதிகளை கண்டறிந்து சுகாதாரப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
திருப்பூர் மாநகராட்சி சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மற்ற உள்ளாட்சிப் பகுதிகளிலும் கழிவுகளை சரியாக அகற்றுதல், டெங்கு காய்ச்சல் உருவாக்கக் கூடிய கொசு உற்பத்தியாகும் கழிவுப் பொருட்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு பணிகளும், விழிப்புணர்வு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியான காய்ச்சல், மூட்டுவலி இருப்பவர்கள் மருத்துவமனைகளில் பரிசோதித்துக் கொண்டு சரியான சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்