திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் நேற்று (நவ.16) மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இதில், கொறடா கண்ணப்பன், கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி கனகராஜ், தங்கராஜ், திவ்யபாரதி, இந்திராணி ஆனந்தன், சாந்தி பாலசுப்ரமணியம், செழியன், கட்சி நிர்வாகிகள் கனகராஜ், பாலசுப்ரமணியம், தம்பி சுப்பிரமணி, தங்கவேலன், நாச்சிமுத்து, பாலாஜி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அந்த மனுவில், “திருப்பூர் மாநகராட்சியின் வரி உயர்வு என்பது மிகவும் கடுமையாக உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மாமன்றக் கூட்டத்தில் வெளி நடப்பு செய்தும், வரி உயர்வுக்கான தீர்மானம் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டு, சொத்து வரி உயர்வால் இன்றைக்கு ஒட்டு மொத்த திருப்பூர் தொழில் முதலாளிகளும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொழில் முனைவோர் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தொழில்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. மேலும், திருப்பூர் தொழில் துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்படைந்துள்ளது. எனவே, கட்டட பிளானிங் அப்ரூவல் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பாதாளச் சாக்கடை டெபாசிட் தொகை உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு போன்றவற்றை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மறு அளவு (ரீ-சர்வே) என்ற பெயரில் ஏற்கனவே வரிவிதிப்பு செய்த கட்டங்களை அளந்து, மறு சீராய்வு என்ற பெயரில் அதிக வரி விதிப்பு செய்வதையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு; தென்னக ரயில்வே விளக்கம்!
திடக்கழிவு மேலாண்மை பணியில் மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறது. குறிப்பாக, மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டிய எஸ்.டபிள்யு.எம்.எஸ். என்கிற தனியார் நிறுவனம், ஆட்களைக் குறைத்து வார்டுகளில் குப்பை அள்ளும் பணியை மிகவும் மந்தமாகவும், குறைவாகவும் செய்து வருகிறது. எனவே, மாநகராட்சி அலுவலர்களை அதிகப்படுத்தி சுகாதாரமான நகரமாக திருப்பூர் மாநகரம் மாற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி கூறியதாவது, “திருப்பூர் மாநகராட்சியில் அதிக அளவு வரிச் சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரி உயர்வால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு குப்பை வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் குப்பைகள் சரியாக அகற்றப்படாமல் மாநகராட்சி முழுவதும் சுகாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
எஸ்.டபிள்யூ.எம்.எஸ் நிறுவனம் சரியாக குப்பை அகற்றாமல், பணியாளர்களை முறையாக பணி செய்ய வைக்காமலும் ஊழல் செய்கிறது. மேலும், அறிவிப்பு மறு அளவீடு என்ற பெயரில் ரிசர்வ் செய்து அதிக வரி விதிக்கப்படுகிறது. அதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடன் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்