"தென்காசியில் பெரிய தொழிற்சாலை கொண்டுவருவேன்" - பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் வாக்குறுதி! - John Pandian election campaign
Published : Apr 2, 2024, 11:06 AM IST
தென்காசி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர் ஜான் பாண்டியன், இன்று சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட சேர்ந்தமரம், திருமலாபுரம், தன்னூத்து உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் பேசியதாவது, "தென்காசி தொகுதியை பெரிய தொழிற்சாலை பகுதியாக மாற்றுவேன். பூக்கள் விளைகின்ற இப்பகுதியில் சென்ட் தொழிற்சாலை பூட்டியுள்ளது. சேர்ந்தமரத்தில் தொழில் வளம் பெருகுவதற்கு உறுதியாக நான் சேவை செய்ய காத்திருக்கிறேன்” இவ்வாறு கூறினார்.
முன்னதாக, பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் அப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். அப்பகுதியில் மக்கள் அவரை மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.