எப்படிப் போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன் சொல்லு.. சுள்ளிக் கொம்பன் ரிட்டன்.. பீதியில் உறைந்த மக்கள்.. - Tamil Nadu Forest Department
Published : Feb 29, 2024, 9:02 PM IST
கோயம்புத்தூர்: கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வனச்சரகம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வந்த சுள்ளி கொம்பன் யானை, அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகள், ஆழியார் அறிவு கோயில் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியது. அவ்வப்போது போக்குவரத்திற்கு இடையூறாகவும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்தியும் வந்தது.
இப்படி பல்வேறு இடையூறுகளைச் செய்து பொதுமக்களை அச்சுருத்தி வந்த சுள்ளிக் கொம்பன் யானை, தற்போது பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி கிராமப் பகுதியில் உள்ள செல்லம்மாள் என்பவரது தோட்டத்திற்குள் நள்ளிரவில் புகுந்து தென்னை மரங்களை சூறையாடியது.
இந்த நிலையில், கிராம மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியோடு சுள்ளிக் கொம்பன் யானையை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் காட்டுக்குள் விரட்டினர்.
இந்த சுள்ளி கொம்பன் யானை கடந்த சில மாதங்களாக காட்டிற்குள் சுற்றி திரிந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வாழும் இடங்களுக்கு உணவு மற்றும் தண்ணீருக்காக வரத்துங்கிதாக கூறப்படுகிறது. மேலும், சுள்ளி கொம்பன் வருகையால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.