கோவை: உடல்நலம் தேறிய பெண் யானை 4 நாட்களுக்கு பிறகு வனப்பகுதியில் விடுவிப்பு! - FEMALE ELEPHANT IN COVAI - FEMALE ELEPHANT IN COVAI
Published : Jun 2, 2024, 4:20 PM IST
கோயம்புத்தூர்: கோவை மருதமலையின் அடிவாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை நான்கு நாளாக சிகிச்சை பெற்று வந்தது. முதலில் பாதிக்கப்பட்ட பெண் யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று யானைக்கு சத்து மாத்திரைகளை புளி, வெல்லம் மற்றும் இடித்த அரிசி சோற்றுடன் கலந்து வைத்து மருந்தாக அளிக்கப்பட்டது.
இந்த யானைக்கு சிகிச்சை தொடங்கப்பட்டதிலிருந்து, அதன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் உடனே இருந்தது. இந்நிலையில், குட்டி யானை தன் தாயிடம் இருந்து அண்ணன் யானையுடன் காட்டுக்குள் திரும்பியது. அதனைக் கண்காணிக்கும் பணியிலிருந்த வனத்துறையினர் இதுகுறித்து கூறியபோது, நேற்று இரவு குட்டி யானையும் அதோடு வேறு மூன்று காட்டு யானைகளும் அங்கு வந்து சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பெண் யானையின் உடல் நலம் சரியாகிக் கொண்டே வரும் நிலையில், அந்த பாதிக்கப்பட்ட யானை தாமாக உண்ணத் துவங்கி உள்ளது. இருப்பினும், கிரேன் உதவியில்லாமல் யானை தாமாக நின்று, நடந்து செல்லும் அளவுக்கு உடல் நலம் பெறும் வரை சிகிச்சைகள் தொடரும் என வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட யானையின் குட்டி யானை திரும்பி வந்தால், அப்போது பெண் யானையின் உடல் நலத்தைச் சோதித்துவிட்டு, அதோடு தாயையும் குட்டியையும் அடர் வனப்பகுதிக்குள் அனுப்பலாம் என்றிருந்தனர்.
இந்நிலையில், உடல்நலம் தேறிய நிலையில், அப்பெண் யானை இன்று வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. பெண் யானையின் மூன்று மாத ஆண் குட்டி அருகே உள்ள நிலையில் இந்த யானை விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.