பழனிமலை அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகள், கடைகள் அகற்றம்! - demolished - DEMOLISHED
Published : Jul 1, 2024, 12:17 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மேற்கு கிரிவலப்பாதையில் அண்ணா செட்டி மடம் என்ற இடத்தில் 120-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பல ஆண்டுகளாக இருந்து வந்தன. இந்த நிலையில், இக்குடியிருப்புகளை அகற்றக் கோரி, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து வருவாய் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த ஆறு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று இடம் வழங்கினர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (திங்கட்கிழமை) வருவாய்த்துறை, கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் உதவியுடன் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி வானங்கள் மூலம் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
குறிப்பாக, பழனிமலை அடிவாரத்தில் படிப்பாதை அருகில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிரபல தனியார் பஞ்சாமிர்த கடையான சித்தநாதன் பஞ்சாமிர்தக் கடையும் நீதிமன்ற உத்தரவின் பேரில், இடித்து அகற்றப்பட்டது. இதற்கிடையே, குடியிருப்புகளை அகற்றும்போது குடியிருப்பு வாசிகள் தடுத்து இடையூறு செய்யலாம் என்பதால் பாதுகாப்பு பணியில் முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.