பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் திருவிழா; பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் - பொள்ளாச்சி மாரியம்மன் கோயில்
Published : Mar 3, 2024, 10:19 AM IST
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர் திருவிழா, ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்.13ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் அலகு குத்தி கோயிலுக்கு வரும் நிகழ்வு நேற்று (மார்ச் 2) நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடலில், பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி, பறவை காவடி, வேல் காவடி, மயில் காவடி எடுத்து, விதவிதமான அலங்கார வளைவுகளில் அமர்ந்தும், அந்தரத்தில் தொங்கிய படியும், கிரேன் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.
மேலும் பக்தர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட சாட்டையால் தங்களை அடித்துக் கொண்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவள்ளுவர் திடலில் தொடங்கிய இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் ஊர்வலம் வெங்கட்ரமணன் வீதி, உடுமலை சாலை கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.