பவானி நகராட்சியுடன் இணைக்க தீர்மானம்.. சலுகைகள் கிடைக்காது எனக் கூறி 500க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம்! - குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி
Published : Jan 31, 2024, 1:40 PM IST
ஈரோடு: பவானி நகராட்சிக்கு உட்பட்ட 25 வார்டு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த ஆண்டு 23ஆம் தேதி அன்று பவானி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பவானி நகராட்சியில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் விதமாக ஆண்டிகுளம், மேட்டுநாசுவம்பாளையம், குருப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளை பவானி நகராட்சியுடன் இணைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஊராட்சிகளை பவானி நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் மத்திய அரசின் நிதி உதவி உடன், பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைக்காமல் போகும் எனக் கூறி அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று (ஜன.30) நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட குருப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தீஸ்வரன் என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலான மக்கள் தினக்கூலி பணியில் இருப்பவர்கள். எங்கள் ஊராட்சிகளை பவானி நகராட்சியுடன் இணைத்தால் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே, தமிழக அரசு கோரிக்கையை ஏற்று தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" எனத் தெரிவித்தார்.