ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்! - srirangam chariot festival - SRIRANGAM CHARIOT FESTIVAL
Published : Mar 26, 2024, 4:24 PM IST
திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த மார்ச் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவையடுத்து, தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.
இந்த நிலையில், முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம், 10ஆம் நாளான இன்று (மார்ச் 26) காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ரெங்கா.. ரெங்கா.. கோவிந்தா..” என பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் நான்கு சித்திரை வீதிகளின் வழியாக வலம் வந்து, நிலையை அடைந்த பின்னர், நம்பெருமாள் மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நம் பெருமாளை தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. தேர் திருவிழாவையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.