வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில் கோரிக்கை வைத்த மக்கள்; நடவடிக்கை எடுப்பதாக பாமக வேட்பாளர் சௌமியா உறுதி! - Lok Sabha Election 2024
Published : Apr 16, 2024, 3:46 PM IST
தருமபுரி: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கட்சியின் மாநில தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி இன்று பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை, மல்லுப்பட்டி, ஜக்க சமுத்திரம், மகேந்திரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மகேந்திரமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் பொழுது அப்பகுதியைச் சார்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் ஆரம்பச் சுகாதார நிலையம் வேண்டுமென்றும், இப்பகுதியில் பேருந்துகளை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சௌமியா அன்புமணி, தான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உங்கள் கோரிக்கையை ஆராய்ந்து, அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.
மேலும், வாக்கு சேகரிப்பின் போது மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தைக் காட்டி, தனக்கு ஒதுக்கப்பட்ட மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து, அதிலிருந்து பீப் சவுண்ட் வரும் வரை காத்திருந்து, பின்பு அங்கிருந்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.