“எங்களோட எச்.எம் எங்களுக்கு வேணும்..” நெல்லை பரப்பாடி பள்ளி மாணவர்கள், பெற்றோர் போராட்டம்! - Parappadi School HM Transfer - PARAPPADI SCHOOL HM TRANSFER
Published : Aug 22, 2024, 10:58 PM IST
திருநெல்வேலி: பரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை, நாங்குநேரி தாலுகா பரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 636 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாபு செல்வன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் வள்ளியூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மொத்தமுள்ள 636 மாணவர்களில் 19 பேரைத் தவிர மற்ற அனைவரும் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர், திருநெல்வேலியில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வந்து தலைமையாசிரியர் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது குறித்து சுதா தேவி என்பவர் கூறுகையில், “பாபு செல்வன் சார் வந்த பிறகு பள்ளியில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவர் வருவதற்கு முன்பு மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டனர். எங்களுக்கு எங்கள் தலைமை ஆசிரியரை மீண்டும் நியமிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.