கொட்டும் மழையில் நடுரோட்டில் இருந்தவர் மீது பைக் ஏற்றிச் சென்ற நபர்.. இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்! - man drove vehicle on a person - MAN DROVE VEHICLE ON A PERSON
Published : Jun 3, 2024, 1:53 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில், நேற்றிரவு (ஜூன் 2) லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில், 42 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மழை பெய்துகொண்டிருந்தபோது, கோயில் அருகே இருந்த சாலையின் நடுவே படுத்திருந்துள்ளார். ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களும் அவரை கடந்து சென்றுள்ளன.
மேலும், அவர் சாலையின் நடுவே படுத்திருந்ததால், சற்று தள்ளி ஓரமாக வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர். இதற்கிடையே ஸ்கூட்டரில் செல்போன் பேசியபடி சென்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், சாலையில் படுத்திருந்த மனநோயாளி மீது ஸ்கூட்டரை ஏற்றிவிட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரை பிடிக்க முயன்றும், அந்நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, அவ்ழியாக வந்த இளைஞர்கள் சிலர் அந்நபரை மீட்டு, முதலுதவி அளித்து பத்தரகாளியம்மன் கோயிலில் பராமரித்துள்ளனர். இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து சத்தியமங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காயமடைந்த மனநோயாளிக்கு சிகிச்சை அளிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.