கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்! - Swamimalai Murugan temple
Published : Apr 25, 2024, 4:56 PM IST
தஞ்சாவூர்: அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில், சித்திரை பெருந்திருவிழாவின் 9ஆம் நாளான இன்று, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, வெற்றிவேல், வீரவேல், சுவாமிநாதசுவாமிக்கு தமிழ் கடவுளுக்கு அரோகரா என முழக்கமிட்டபடி, தேரினை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிக்கட்டுகளாக இருந்து, இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை சாதிப்பதாக ஐதீகம் உள்ளது.
இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டும் இவ்விழா கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இடும்பன், பூத வாகனம், ஆட்டுக்கிடா, யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை என பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, உற்சவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி விசேஷ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருள, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பக்தியுடன் கலந்து கொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்து, தேரில் உலா வந்த சாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.