கும்பக்கரையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை! - flood in kumbakarai falls
Published : May 13, 2024, 8:05 PM IST
தேனி: பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கோடைக் கால விடுமுறையைப் போக்க பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த அருவிக்கு வருகை தந்து வெயிலின் தாக்கத்தைத் தனித்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாகத் தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு 12 மணி வரை விட்டு விட்டுக் கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவிக்குச் செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.