சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் செல்லவிருந்த, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று - வியாழக்கிழமை (நவம்பர் 21) அதிகாலை 134 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 146 பேருடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.
விமானம் அதிகாலை நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து, விமானத்தை உடனடியாக தரையிருக்க முடிவு செய்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு திரும்பிய விமானம்: தகவலின் பேரில், சென்னை விமான நிலைய அதிகாரிகள் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதி அளித்து, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னர், மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 2.30 மணியளவில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாற்று விமானம்: பின்னர், விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால், பல மணி நேரம் முயற்சி செய்தும், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரி செய்யவில்லை என்பதால், விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசரமாக மலேசியா செல்ல இருந்த 80 பயணிகள் மட்டும், சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையிலிருந்து துபாய் போகவிருந்த பயணியிடமிருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்!
மற்ற பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இன்று, வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) அதிகாலை 54 பயணிகளுடன் மீண்டும் மலேசியா புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, துரித நடவடிக்கை மேற்கொண்டதால், விமானம் பெரும் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் இருந்த 134 பயணிகள் உள்பட 146 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்