ஆறு மாதத்திற்கு பின் கவியருவி திறப்பு; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்! - kavi aruvi open to visitors - KAVI ARUVI OPEN TO VISITORS
Published : Jul 3, 2024, 1:24 PM IST
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தில் குரங்கு அருவி என்று அழைக்கப்படும் கவியருவி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல், அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இதனால் இங்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தென்மேற்கு பருவ மழையால் வறண்ட அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது அருவியில் சீரான நீர்வரத்து வந்துக்கொண்டிருப்பதால் ஆறு மாதத்திற்கு பிறகு ஆழியார் கவியருவி இன்று காலை வனத்துறையினரால் பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
மேலும் நவமலை, வால்பாறை சாலை பகுதிகளில் பகலில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் பயணிகள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.