நீலகிரியில் நீர் பனி, உறை பனி என மாறி மாறி நிலவும் கால நிலை.. கடும் குளிரால் மக்கள் அவதி! - கடும் குளிர்
Published : Jan 20, 2024, 1:55 PM IST
நீலகிரி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில், தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனி, உறை பனி என கால நிலை மாறிமாறி காணப்படுகிறது. இன்று காலை மிகக் குறைந்த அளவாக 2.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இந்த பனியின் தாக்கமானது கோடநாடு, தொட்டபெட்டா, மார்கெட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வருகிறது.
அதிகாலையில் ஓட்டுநர் பணி மற்றும் மலைத் தோட்ட காய்கறித் தோட்டப் பணிக்குச் செல்பவர்கள் பகல் நேரத்திலேயே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். மேலும் கடும் மேக மூட்டத்தால், மலைப்பாதையில் எதிரே உள்ள வாகனம் தெரியாமல், வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு ஊர்ந்து செல்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து வாகனங்கள் குன்னூர் சென்றடைய, கிட்டத்தட்ட 3 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்க, வாகன ஓட்டிகளை கவனமுடன் வாகனங்களை இயக்கிச் செல்ல வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்த கடும் பனி மூட்டம் காரணமாக, சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் நீலகிரி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.