குன்னூர் பொங்கல் பண்டிகை ஊர்வலம்..வெளிநாட்டவர் பங்கேற்று உற்சாக கொண்டாட்டம்! - FOREIGNERS IN PONGAL FESTIVAL
Published : Jan 14, 2025, 8:21 PM IST
நீலகிரி: பொங்கல் திருநாளை முன்னிட்டு குன்னூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நடனம் ஆடி உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளனர்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 14) ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த குன்னூர் பகுதிகளில் உள்ள டென்ட் ஹில் பகுதியைச் (Tent Hill) சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மேளதாளங்களுடன், நடனமாடி ஊர்வலமாக மவுண்ட் ரோடு வழியாக ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயிலை நோக்கி சென்றுள்ளனர். அப்பொழுது, லண்டனில் இருந்து சுற்றுலா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் வெளிநாட்டினவர்களுக்கு பூ மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர். பின்னர், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். தொடர்ந்து, ஊர்வலத்துடன் வெளிநாட்டவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர். இதனை, அப்பகுதியில் இருந்தவர்கள் கண்டு களித்துள்ளனர். இறுதியாக, அனைவருக்கும் பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.