சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்று அண்மையில் யூ.ஜி.சி. புதிய விதியை கொண்டு வந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெறும் வரை ஒய மாட்டோம் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் உயர் கல்வி தேசிய சராசரியை விட நல்ல நிலையில் உள்ளது. இந்த நிலையில் பல்கலைக் கழக மானியக்குழ ஜனவரி 6ந் தேதி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்சத் தகுதிகள் மற்றும் உயர் கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் விதிமுறைகள்-2025க்கான வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாநில உரிமைக்கு எதிரானது
இது, முழுவதுமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், பல்கலைக்கழகங்களை உருவாக்கி நிர்ணயிக்கும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. துறைகளுக்கு தொடர்பில்லாத அன்னியர்களை ஆசிரியர்களாக பரிந்துரைக்கிறது. துணைவேந்தர் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வு குழுக்களிலும் ஒன்றியத்தின் நியமன உறுப்பினர்களின் ஆதிக்கத்திற்கு வழி செய்யும் விதிகள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: "தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்பது வலதுசாரி அரசியல் நாடகம்" - திருமாவளவன் பதிலடி!
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில், மாநில அரசுக்கான உரிமையை அறவே நீக்கிவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கே முழு அதிகாரத்தையும் வழங்கும் விதிமுறை மாநில உரிமைக்கு எதிரானது. மேலும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பதற்கு கல்வியாளர் மற்றும் கல்வித் தகுதி, அனுபவம், சிறப்பு தகுதிகள் உள்ளிட்டவைகளை கடந்து தொழிற்சாலையிலிருந்து, பொதுத்துறை நிறுவனத்திலிருந்து வல்லுநர் என்ற வகையில் கல்வியாளர் அல்லாத நபர்களை துணைவேந்தராய் நியமிக்கும் ஆபத்தான முடிவுக்கு பரிந்துரைக்கிறது.
பட்டம் வழங்கினாலும் செல்லாது
தேசிய கல்விக் கொள்கை 2020ஐ ஏற்கவில்லை என்றால் அத்தகைய பல்கலைக்கழகங்கள் பட்டப் படிப்பை நடத்த இயலாது. அதாவது பல்கலைக்கழகம் பட்டம் வழங்கினாலும் செல்லாது. இந்த அறிவிப்பு மாநிலப் பல்கலைக்கழகங்களை முடக்கும் செயல். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 9 ந் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.
மேலும் 9 மாநிலங்களின் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதனைத் தொடர்ந்து, பெரும்பாலான மாநிலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்ததோடு, கேரளா அரசு தனது சட்டமன்றத்திலும் இந்த வரைவு நெறிமுறைக்கு எதிராக தனித் தீர்மானத்தை நிறைவேற்றியது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் எதிர்த்துள்ளார். கல்வி சார்ந்த உரிமைகள் அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள போது, மாநில அரசை கலந்தாலோசிக்காமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிகார வரம்பை மீறியது ஆகும்.
சமூக நீதிக்கு எதிரானது
அதே நேரத்தில் டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம் என்பது ஏற்புடையது அல்ல. தொழில் கல்வியில் இருந்து பொதுக் கல்விக்கு மாணவர்கள் மாறி படிக்கலாம் என்பது தவறானது. ஒரே நேரத்தில் 2 இளங்கலை, 2 முதுகலை படிக்கலாம் என்பது கண்டிக்கத்தக்கது. இது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது.
ஆளுநருக்கு ஒரு எல்லை உண்டு
அகில இந்திய அளவில் உயர்க் கல்வியில் இந்தியா 28 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு 48 சதவீதம். பிப்ரவரி 5ந் தேதிக்குள் draft regulations@ugc.gov.in என்ற இமெயில் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் அதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மாநில கல்விக் கொள்கை திட்டப்படி அனைவரும் இதனை எதிர்த்து மெயில் அனுப்ப உள்ளோம்.
ஆளுநருக்கு ஒரு எல்லை உண்டு; அதைத் தாண்டி செயல்படும் போது நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். பச்சையப்பன் கல்லூரியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.