அருப்புக்கோட்டையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து.. நீலகிரியில் 3 சொகுசு கார்களும் தீயில் எரிந்து சேதம்! - car fire accident
Published : Apr 11, 2024, 10:46 AM IST
விருதுநகர்/நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் பேரிடர் பாதுகாப்பு மைய வளாகத்தில், நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று சொகுசு கார்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியது.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த குன்னூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயானது மளமளவெனப் பரவியதால், கூடுதலாக உதகை தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயானது அணைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தூத்துக்குடி, விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெய பாலகிருஷ்ணன் (34) என்பவர், தனது நண்பர்களுடன் அருப்புக்கோட்டையில் இருந்து விளாத்திகுளத்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது, கார் வாழ்வாங்கி விலக்கு அருகே மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனால், காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, காரில் இருந்து உடனே கீழே இறங்கியுள்ளனர்.
ஆனால், காரில் பற்றிய தீ மளமளவெனப் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.