விஜயகாந்த் மகனை ஆதரித்து புரோட்டா சுட்டு மக்களிடம் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி! - ex minister prepared parotta - EX MINISTER PREPARED PAROTTA
Published : Apr 4, 2024, 10:53 PM IST
விருதுநகர்: அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 3 நாட்களாகச் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். இருவரும் தெரு, தெருவாகச் சென்று மக்களைச் சந்தித்து, பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஏப்.04) தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், சிவகாசி - திருத்தங்கல் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டுத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்த ஓட்டல் ஒன்றிலிருந்த புரோட்டா மாஸ்டரிடம் இருவரும் வாக்கு சேகரித்த பின்னர், புரோட்டா தயார் செய்யத் தொடங்கினர். சிறிது நேரத்தில் புரோட்டா தயாரானதும், இருவரும் ஒரே வாழை இலையில் புரோட்டோக்கைளை வைத்துச் சாப்பிட்டனர்.
முன்னாள் அமைச்சர் புரோட்டா சுடுகிறார் என்ற தகவல் பரவிய நிலையில், அப்பகுதியில் அதிகளவில் மக்கள் கூட்டம் கூடியது. ஓட்டலில் கூடிய பொதுமக்களிடம் விஜய பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்து, அவருக்குக் கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்கும்படி ராஜேந்திர பாலாஜி கேட்டுக்கொண்டார்.