பக்ரீத் பண்டிகை; புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் வியாபாரம் அமோகம்! - Punjaipuliampatti special livestock - PUNJAIPULIAMPATTI SPECIAL LIVESTOCK
Published : Jun 13, 2024, 3:17 PM IST
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தை ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சந்தையில் தங்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க, விற்கச் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட ஆட்டுக்கிடாய் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால், ஆடுகள் விலை 3,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. இதில் கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும், விலையும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் சந்தைக்குக் கொண்டு வரப்பட்ட அனைத்து ஆடுகளும் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.