திருவாரூர்: சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் உள்ளே இசையமைப்பாளர் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்ற சர்ச்சை கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, ஏன் அவ்வாறு நடந்தது எனக் கோயில் நிர்வாகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில், யாருக்கும் அறிவிக்காமல், இளையராஜா சாமி தரிசனம் செய்து சென்றுள்ளார்.
திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்தது திருவாரூர் தியாகராஜர் கோயில். இது சர்வதேச பரிகார ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் பூமிக்குரிய ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது குறித்த எவ்வித வரலாற்று ஆவணமும் இல்லாத காரணத்தினால் தஞ்சாவூர் பெரிய கோயிலை விடப் பழமையான கோயிலாக இந்த கோயில் கருதப்படுகிறது.
மேலும், இந்த கோயிலில் சிவபெருமான் தியாகராஜ சுவாமியாகவும், அம்பாள் கமலாம்பாளாகவும் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து, சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இதையும் படிங்க: வெள்ளிவிழா காணும் குமரி வள்ளுவர் சிலை.. 3 அங்குலத்தில் திருவள்ளுவர் சிலை செய்து அசத்திய நெல்லை ஓவியர்!
பிரபல இசையமைப்பாளர் இசை ஞானி இளையராஜா, சமீபமாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஆண்டாள் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்யும் போது, கருவறைக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் ஊடகம் மற்றும் காவல் துறையினர் என யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், நேற்று (டிச.29) திடீரென பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று இரவு திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்த இளையராஜாவிற்கு, ஆலய நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர் திருவாரூர் தியாகராஜர் சன்னதி மற்றும் கமலாம்பாள் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர், திருச்சி புறப்பட்டுச் சென்றார். அவர் செல்லும் வரை அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.