சென்னை: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், அண்ணா சாலை வெலிங்டன் பிளாசா அருகில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த அமைதி ஊர்வலத்தில் மன்மோகன் சிங் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டா வாகனத்தில் எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவன் ராஜீவ்காந்தி உள் அரங்கத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்குபெறும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு புகழஞ்சலி செலுத்தினர். முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பொருளாதாரத்தில் சீரழிவு:
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, "சென்னையைப் பார்க்கும் போது விமான நிலையத்திலிருந்து கடற்கரை செல்லும் வரை சென்னை மாநகரம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அது மன்மோகன் சிங் காலத்தில், அவர் கொடுத்த திட்டத்தால் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது என அவரது பெருமைகளையும் திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்று தீர்க்கதரிசனமாக அவர் சொன்னது தான் இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. Demonetization என்பது மிகப்பெரிய பொருளாதார பேரிடர் / Economic Disaster என்று ஆவேசமாக சொன்னார். அது எந்த அளவுக்கு உண்மை என இன்று பார்க்கிறோம். பலர் பதவியை தேடி அலைவார்கள் ஆனால் பதவி அவரை தேடி வந்தது என்று திருநாவுக்கரசர் சொன்னதை சுட்டிக் காட்டி பேசினார்.
மேலும், நன்றி என்ற வார்த்தைக்கு பொருத்தமான உரிதர் அரசியலில் உண்டு என்றால் அது மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. காரணம் தன் மீது நம்பிக்கை வைத்து பெரிய பதவியை ஒப்படைத்த தலைவிக்கு காலம் முழுவதும் விசுவாசமாக இருந்து மறைந்த அவரை எல்லா அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
ரூபாய் நோட்டில் கையெழுத்திட்ட ஒரே பிரதமர்:
நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, "மன்மோகன் சிங் தனக்காக எந்த பதவியும் கேட்டுப் பெற்றதில்லை. அவர் வகித்த பதவி அவர் திறமைக்கு கிடைத்தது. அவர் நிதியமைச்சராக இருந்தபோது இந்திய நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாடுபட்டவர். அப்படிப்பட்ட தலைவர் இந்த தேசத்தில் மிகவும் அரிது.
மேலும், உங்களை விட உயர்ந்த பிரதமரைப் பார்க்க முடியாது என்று ராகுல் காந்தி சொன்னதாக நினைவு கூர்ந்தவர், இப்படிப்பட்ட தலைவரை இழந்தது காங்கிரஸ் இயக்கம் என உருக்கமாகத் தெரிவித்த அவர், எவ்வளவு பேர் பிரதமராக இருந்தாலும், ரூபாய் நோட்டில் கையெழுத்திட்ட ஒரே பிரதமர் மன்மோகன் சிங் தான் எனவும், அவர் தேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரை நூற்றாண்டாக இந்தியாவை வடிவமைத்த சிற்பி மன்மோகன் சிங்கிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இரங்கல் கூட்டமும், மௌன ஊர்வலமும் நடத்தினோம். மேலும், தமிழக முதலமைச்சரையும், டெல்லியிலிருந்து தலைவர்களையும் வரவழைத்துப் படத்திறப்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இராமதாசு - அன்புமணி ராமதாஸ் கருத்து மோதல்:
அவர்கள் தான் நிறைய விமர்சனம் செய்கிறார்கள், அதனால் அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிய அவர், அவர்களை விமர்சனம் செய்தால் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள். குடும்ப ஆட்சி என்று சொல்வார்கள். அவர்கள் குடும்பத்திலேயே பிரச்சினை ஒரே மேடையில்.. இது உண்மையா? என்று தெரியாது என்றார்.
இதையும் படிங்க: 'இது உட்கட்சி பிரச்சனை, யாரும் பேச வேண்டாம்'.. ராமதாஸை சந்தித்த பின்னர் அன்புமணி சொன்னது என்ன?
அண்ணாமலை சாட்டை அடி:
இனிமேல் எப்போதும் அவர் காலத்தில் செருப்பே போட முடியாது. செருப்பு போடுவதற்கு வாய்ப்பே கிடையாது. இந்தியாவில் வடமாநிலங்களில் யாரேனும் சாட்டை எடுத்து அடித்து இருக்கிறார்களா என இன்று டில்லியில் நானும் கேட்டேன். அப்படிப்பட்ட வேலையை யாரும் செய்வதில்லை. எல்லோரும் கவனத்தில் இருக்க வேண்டும் எந்த காரணமாகவும் இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுதல் ஏதாவது இருக்கலாம். அதைக் காணிக்கையாக செலுத்தி இருக்கலாம்.
தங்கம் , வெள்ளியில் உடல் உறுப்புகளை தானம் செய்வார்கள். அப்படி இறைவனுக்காக செய்யப்படும் படைப்புகளில் சாட்டையடியும் ஒரு படைப்பு. அது பஞ்சு சாட்டையா, நார் சாட்டையா? அல்லது உண்மையிலேயே அடித்துக் கொள்ளும் சாட்டையா? எந்த சாட்டை என்று பார்க்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.
பாமக உட்கட்சி மோதல்:
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "பாமக பொதுக்கூட்ட மேடையில் இராமதாசு - அன்புமணி ராமதாஸ் கருத்து மோதல் குறித்த கேள்விக்கு, திமுகவைப் பொறுத்தவரை மற்ற கட்சியில் நடக்கும் உட்கட்சி மோதலை விமர்சிக்கவும் விரும்பவில்லை. அதைப் பற்றி எங்களுக்கு அக்கரையும் இல்லை. திமுகவை குடும்ப அரசியல் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்பது குறித்து கேள்விக்கு, ஒரு விரலை நீட்டி விமர்சனம் செய்தால் மற்ற மூன்று விரல்கள் நம்மைக் காட்டுகிறது என்ற பழமொழி தான் நான் சுட்டிக் காட்டுகிறேன். இதை பாமக உணர வேண்டும்" எனத் தெரிவித்தார்.