சென்னை: அரசு பள்ளிகளை தத்தெடுப்பதாக சொல்லவில்லை என்றும், அரசு பள்ளிகளுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான் தனியார் பள்ளிகளின் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து தேவையான வசதிகளை செய்து கொடுப்போம் என்று சொல்லப்பட்டது எனவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் அரசகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
பல்வேறு தனியார் பள்ளிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற அமைப்பு (டிச.30) திங்கட்கிழமை அன்று துவங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். அந்த கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், வரும் கல்வி ஆண்டில் 500 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அதன் அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மூலமாக அரசு பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது என்ற ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, இந்த தீர்மானத்தை குறிப்பிட்டு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். தனியார் பள்ளிகளின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்வது என்பது அரசுப் பள்ளிகளை தனியார் மயம் நோக்கி இட்டுச் செல்கிறது என்றும், திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்து அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தன. மேலும், இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, 500 பள்ளிகளை மேம்படுத்துவதற்கு கூட அரசிடம் நிதி இல்லையா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி, கடுமையாக விமர்சனம் செய்தார். இப்படிப்பட்ட சூழலில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் அரசகுமார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், மழலையர் துவக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதரவாரிய பள்ளிகள் என ஒட்டு மொத்த பள்ளிகளுக்கும் பல்வேறு சங்கங்கள் இயங்கி வந்தன.
அந்த சங்கங்களை எல்லாம் ஒருங்கிணைந்து பெரும்பான்மையான சங்கங்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய ஒரு சங்கத்தை உருவாக்கி அந்த சங்கத்தின் துவக்க விழாவிற்கு பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர், தனியார் பள்ளி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாழ்த்துரை வழங்கவும், விழாவினை துவக்கி வைக்கவும் அழைத்தோம். அதற்காக அவர்கள் அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள்.
அரசு பள்ளிகளில் பயின்ற நாங்கள் தான் தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறோம். நாம் அரசு பள்ளிகளுக்கு எந்த விதத்திலாவது பயன்பாடாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் அந்த நிகழ்வின் போது பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
அதே தருணத்தில், வரும் கல்வியாண்டில் 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அருகாமையில் இருக்கிற தனியார் பள்ளிகள் அந்த பள்ளிகளில் பயில்கிற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலே நூலகங்கள், பள்ளிக்கு வர்ணம் பூசுதல், பள்ளி விளையாட்டு மைதானங்களை சுத்தப்படுத்துதல், தூய்மைப் படுத்துதல் விளையாட்டு உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல், மாணவர்களுக்குத் தேவையான இதர General knowledge என்று சொல்லக் கூடிய பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல்.
மேலும், அதற்கான பொருட்கள் வாங்கிக் கொடுத்தல், கணினி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட நவீன பொருட்களை வாங்கிக் கொடுத்தல் என்று பல்வேறு வகையிலே உதவிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொல்லப்பட்டதே தவிர, எந்த இடத்திலும் அரசு பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை; அதேபோல், தத்தெடுப்போம் என்று அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் சொல்லவில்லை.
இதையும் படிங்க: "வரும் கல்வி ஆண்டில் 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடிவு" - தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு!
அது சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்கி தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை தத்தெடுக்கிறதா? என்று கேட்பது உண்மையாகவே 500 பள்ளிகளுக்கு CSR மூலம் உதவ தயாராக உள்ளோம் என்று சொன்ன தனியார் பள்ளி தாளாளர்களுடைய அந்தப் பெருந்தன்மையை கொச்சைப் படுத்துவதாக உள்ளது. ஆகவே தயவுகூர்ந்து இதைசரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
எந்த இடத்திலும் தத்தெடுக்கப்படும் என்ற வார்த்தை யாராலும் உபயோகப்படுத்தப்படவில்லை. அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகள் CSR மூலம் பங்களிப்பார்கள் உதவுவார்கள் என்று தான் சொல்லப்பட்டதே தவிர தத்தெடுக்கும் என்ற வார்த்தை இல்லை என்பதை இந்த நேரத்திலே தெளிவுபடுத்திக் கொள்கிறோம். மேலும் முக்கிய குறிப்பாக 500 அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை CSR மூலம் வழங்க முன்வந்துள்ள தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர், ஆசிரியர் கழகம் முழு ஆதரவும் நன்றியும் தெரிவித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.