மதுரை சமத்துவ மீன்பிடித் திருவிழா; கொண்டாட்டத்தின் ட்ரோன் காட்சிகள்! - FISHING FESTIVAL IN MADURAI
Published : Jun 1, 2024, 4:47 PM IST
மதுரை: மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே ஐந்துமுத்தன் என்னும் கோயிலில் கண்மாய் ஒன்று உள்ளது. இந்த கண்மாய் சுமார் 100 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இது சுற்றுவட்டாரத்தில் உள்ள கள்ளந்திரி, அம்மச்சியாபுரம், தொப்புலான்பட்டி, உள்ளிட்ட 5 கிராமங்களுக்குச் சொந்தமானது. அந்த ஊர்மக்கள் வேண்டுதலாக மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு விடப்பட்ட மீன் குஞ்சுகளை ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் சமத்துவ மீன்பிடி திருவிழாவில் பிடித்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
இந்நிலையில், இன்று அதிகாலை இந்த மீன்பிடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நத்தம், மேலூர், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கிராம பெரியவர்கள் வெள்ளை வீசி அனுமதி தந்த பின்னர், அனைவரும் மீன்களை பிடிக்க துவங்கினர்.
இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, அயிரை, விரால், ரோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். கண்மாயில் பிடித்த மீன்களை விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளிலே சமைத்து உண்ணுவது வழக்கம். இவ்வாறு மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஊருக்குள் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என நம்புகின்றனர்.