மகா சிவராத்திரி; ராணிப்பேட்டை ஏகாம்பரநாதர் கோயிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு - மகா சிவராத்திரி வழிபாடு
Published : Mar 9, 2024, 7:12 AM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பூக்காரத் தெருவில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ளது. இது காசி மன்னர் வழிபட்ட திருத்தலமாகும். மாசி மாத மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நேற்று (மார்ச் 8) தேய்பிறை பிரதோஷ தினம் இந்த கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் இருக்கும் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாரதனைக் காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பல்வேறு வகையான மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை கூடியிருந்த பக்தர்கள் அனைவரும், சிவபூதகன வாத்தியங்களுடன் 'நமச்சிவாய.. நமச்சிவாய..' என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, கோயிலை முழுவதும் வலம்வந்து பிரதோஷ நாதர் முன்பாக பெண்கள் பலர் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவைகளில் இருந்து சிவ பாடல்களைப் பாடியபடி, சிவனை மனதில் நினைத்துக் கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.