பென்னாகரம் பகுதியில் மகளிர் கல்லூரி பேருந்தில் ஏறி, மாணவிகளிடம் வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி! - Dharmapuri pmk candidate Sowmya - DHARMAPURI PMK CANDIDATE SOWMYA
Published : Mar 31, 2024, 5:19 PM IST
தருமபுரி: பென்னாகரம் பகுதியில் இன்று (மார்ச்.31) பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்தில் ஏறி அதிலிருந்த மாணவிகளிடம் வாக்கு சேகரித்தார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
அந்த வகையில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாமக சார்பில், வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த 2 நாட்களாக தன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று பாப்பாரப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் சௌமியா அன்புமணி அந்த வழியாக மாணவிகளை ஏற்றி வந்த தனியார் கல்லூரி பேருந்தை நிறுத்தி, அதிலிருந்த மாணவிகளிடம் உரையாடினார்.
அப்போது அவர், “நீங்கள் கல்வியை இடைநிறுத்தாமல் கற்க வேண்டும், துணிச்சலாக எல்லாவற்றையும் சந்திக்க வேண்டும், உங்களுக்கான வேலைவாய்ப்புகளை நான் ஏற்படுத்தித் தருவேன். மேலும் இங்கு தண்ணீர் பிரச்சனை இருந்துவரும் நிலையில், அதனைச் சரி செய்யும் முயற்சி எடுப்பேன். உங்களுக்கான எல்லா வசதிகளையும் ஏற்படுத்திதர விரும்புகிறேன். என்னை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்”, என பேசியுள்ளார். அவர் பேசியதைத் தொடர்ந்து, பேருந்திலிருந்த கல்லூரி மாணவிகள் சௌமியா அன்புமணியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.