காட்பாடி ஜடா முனீஸ்வரருக்கு 7ஆம் ஆண்டு திருவிழா; பக்தர்கள் அன்னதானமாகப் பிரியாணி! - Jada Muneeswarar Temple festival - JADA MUNEESWARAR TEMPLE FESTIVAL
Published : May 12, 2024, 9:30 PM IST
வேலூர்: காட்பாடி அருகே இரயில்வே தளத்தில் ஒற்றைப் பனை மரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் கோயிலில் 7ம் ஆண்டு திருவிழா இன்று (மே.12) வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம் ரோடு அருகில் உள்ள இரயில்வே தளத்தில், ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள வேப்பமரம் ஒன்றில் ஸ்ரீ பச்சையம்மனும், ஒற்றை பனை மரத்தில் ஸ்ரீ ஜடா முனீஸ்வரரும் எழுந்தருளியிருப்பதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இந்த கோயிலில் இன்று ஏழாம் ஆண்டு திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்த ஸ்ரீ ஜடா முனீஸ்வரரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பக்தி பரவசத்துடன் வழிபட்டு, தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானமாக பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமாரின் மனைவி சரஸ்வதி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் திமுக பிரதிநிதி சீ.நாயுடுபாபு, பூசாரி பாபுஜி, கவின், பாலமுருகன், சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.