கோயம்புத்தூர்: தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசர் உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர் தொடர்ந்து, கைது செய்து அனைவரையும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்துள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், முதல் குற்றவாளியாக தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்ஏ பாஷா கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சைக்காக வந்த பாஷா கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் கோவையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவரது ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி அளித்ததற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, அவரது இறுதி ஊர்வலத்துக்கு அனுமதியளித்த தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில், கருப்பு தின பேரணி நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
பா.ஜ.க பேரணி:
அதன்படி, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி நேற்று (டிசம்பர் 20) வெள்ளிக்கிழமை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்துள்ளார். இக்கூட்டத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
பின்னர் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “திமுக அரசு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. முதலமைச்சர் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியாக, இஸ்லாமிய பயங்கரவாதிகள் செயல்பட்டனர். இவர்கள் கார் குண்டுவெடிப்பு நடத்துவதற்காக சத்தியமங்கலம் காட்டுக்குள் ஒன்று கூடி திட்டம் தீட்டியது என்ஐஏ-வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா உடல் அடக்கம்; சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி!
மேலும், என்ஐஏ-வின் அறிக்கையில், பொதுமக்கள் அதிகம் கூடும் துணிக்கடைகளிலும், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் வெடிகுண்டு வைக்க திட்டம் திட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சிலிண்டர் மற்றும் வெடிபொருட்களை காரில் கொண்டு செல்லும்போது குண்டு வெடித்துள்ளது. இதனை முதலமைச்சர் விபத்து என்று கூறி வருகிறார். காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டது.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து, இன்று மாலை நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்ட, இந்து முன்னணி மாநிலத் தலைவர் ஐயா திரு. காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் திரு. சிவலிங்கம், @BJP4TamilNadu… pic.twitter.com/MWj1Oc7CWt
— K.Annamalai (@annamalai_k) December 20, 2024
தலைவர்கள் அஞ்சலி
உயிரிழந்த பாஷாவின் உடலுக்கு நாதக தலைவர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தனியரசு ஆகியோர் அஞ்சலி செலுத்தி வாக்கு அரசியலை செய்து வருகின்றனர். குண்டுவெடிப்பு குற்றவாளியின் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் காவல்துறையினர், பாஜகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் வழங்குவதில்லை.
திமுக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து செய்யப்படுகிறது. இது இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் திருப்பி விடும் செயலாகும். எனவே, மாநில அரசு தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதிலும், பயங்கரவாதத்தை கண்காணித்து தீவிரவாதிகளை தண்டிப்பதிலும் உரிய வகையில் செயல்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் கோயம்புத்தூரில், கோவை குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து, நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்டோம். இந்து முன்னணி மாநிலத் தலைவர் ஐயா திரு. காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் திரு. சிவலிங்கம். கோவை… pic.twitter.com/ja9KiAQQJ0
— K.Annamalai (@annamalai_k) December 20, 2024
பொதுக் கூட்டத்தையடுத்து, பாஜகவினர் பேருந்து நிலையம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற முயன்றுள்ளனர். இதனால், தடையை மீறி செல்ல முயன்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசர் உட்பட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.