காரமடை அரங்கநாதர் கோயில் தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்! - அரங்கநாத சுவாமி கோயில்
Published : Feb 24, 2024, 10:41 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மகத் தினத்தன்று தேர்த்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாசி மகத் தேர்த்திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து காரமடை அரங்கநாத பெருமான் தினந்தோறும் அன்னப்பட்சி வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம்,கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பல்லக்கில் எழுந்தருளி திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலி தார்.
அதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாதர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.தொடர்ந்து அன்றிரவு யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.
இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று மாலை துவங்கியது. முன்னதாக தேரோட்டத்தை ஒட்டி அரங்கநாத பெருமானுக்கு சிறப்புப் பூஜைகள் செய்த நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அதிகாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து மாலை நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் கோவை,திருப்பூர், நீலகிரி,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தாசர்களின் சங்கு,சேகண்டி முழங்க, பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்கத் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.பின்னர், திருத்தேரானது 4 மாட வீதிகளின் வழியாக வலம் வந்து இறுதியாகத் தேர் நிலையை வந்தடைந்தது.