"நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய காங்கிரஸ் நிர்வாகி!
Published : 4 hours ago
கோயம்புத்தூர்: இளைஞர் காங்கிரஸின் சட்டமன்ற முன்னாள் தலைவரும், அரசியல் ஆலோசகருமான பிரபு, நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் என்ஐஏவிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, "நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், 'காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்.
பிரபாகரனின் மகன் இறந்ததற்கு ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் விடமாட்டோம்' என்று பேசியிருக்கிறார். பிரபாகரனின் புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியின் பேனர் மற்றும் போஸ்டர் களில் உபயோகிக்கிறார்கள். எல்டிடிஇயின் (LTTE) பெயர்களையும் உபயோகிக்கிறார்கள், இதனை தேர்தல் ஆணையம் உட்பட யாரும் கண்டு கொள்வதில்லை.
எல்டிடிஇ, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்றிருக்கும் போது அதன் பெயரை அனைத்து போஸ்டர் மற்றும் பேனர்களில் சீமான் உபயோகிறார்கள். இது சட்டப்படி தவறு. எனவே அவரது கட்சியை அனைத்து தேர்தல்களில் இருந்தும் தடை செய்ய வேண்டும் சீமான் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும்,என்ஐஏவிற்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளேன் என தெரிவித்தார்.