களைகட்டிய கோவை கோனியம்மன் கோயில் தேர் திருவிழா! - Koniamman Temple festival
Published : Feb 28, 2024, 8:00 PM IST
கோயம்புத்தூர்: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோயிலில், தேர்த் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்தேர் திருவிழாவிற்கு கோவை மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்தனர்.
காலையிலிருந்து பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். அதனைத் தொடர்ந்து. மதியம் 2 மணி அளவில், தேர்முட்டி பகுதியிலிருந்து தேர் இழுக்கப்பட்டு, ஒப்பணக்கார வீதி வழியாக பிரகாசம் வந்தடைந்தது. பின்னர், பிரகாசம் வழியாக மீண்டும் தேர்முட்டியைச் சென்றடைந்தது.
முன்னதாக வருடம்தோறும் வழக்கமாக நிகழும் கடைவீதி காவல் நிலையத்திலிருந்து, காவல் நிலையம் சார்பில் சீர்வரிசைகள் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்காக கோயில் நிர்வாகிகள் கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் சசிகலாவிற்கு பரிவட்டம் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காவலர்கள் புடவை, மலர்மாலை அடங்கிய சீர்வரிசைகளை எடுத்துச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அத்தர்ஜமா அத் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கினர். தேரோட்டத்தின்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி, ‘ஓம் சக்தி பராசக்தி’ என உற்சாக முழக்கங்களை எழுப்பினர். மேலும், தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்தும் மாற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.