கோவையில் ஸ்மார்ட் வாட்ச் திருடிய தம்பதி; வைரலாகும் சிசிடிவி காட்சி! - ஸ்மார்ட் வாட்ச்
Published : Jan 31, 2024, 2:36 PM IST
கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர்புறம் ஹை பயானிக்கல் என்ற கடை இயங்கி வருகிறது. இங்கு செல்போன், கைக்கடிகாரம் விற்பனை மற்றும் பழுதும் நீக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி இந்த கடைக்கு ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அதில் கணவர் செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் (Temper Glass) ஒட்ட வேண்டுமென கடைக்காரரிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, அவரது மனைவி கடையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கடையை நேட்டமிட்டவாறு இருந்துள்ளார். அப்போது, டெம்பர் கிளாஸை கடைக்காரர் ஒட்டிக் கொண்டிருந்த வேளையில், அந்த பெண்மணி அருகில் இருந்த ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch) பாக்சை எடுத்து, யாரும் அறியாத நேரத்தில் அவரது பையில் போட்டுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், திருடிச் சென்ற அந்த ஸ்மார்ட் வாட்ச்-ன் மதிப்பு சுமார் 2 ஆயிரத்து 500 ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து இதுவரை எந்த புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.