பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த பெண்ணை நோக்கி வந்த கார்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - car hit woman at petrol station - CAR HIT WOMAN AT PETROL STATION
Published : May 25, 2024, 8:10 PM IST
வேலூர்: வேலூர் மாவட்டம், ஆவாரம்பாளையம் அருகே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த பெண் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் அரியூர் மலைக்கோடியில் இருந்து பென்னாத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆவாரம்பாளையம். இப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பென்னாத்தூரைச் சேர்ந்த ரேக்கா (32) என்ற பெண் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பங்கிற்கு பெட்ரோல் போட வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெண்ணிண் மீது மோதியுள்ளது.
தொடர்ந்து, கார் பெட்ரோல் பங்கின் இயந்திரம் மீது மோதியது, இதில் அந்த இயந்திரம் உடைந்து விழுந்தது. இதில் ரேக்காவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் காரில் வந்தவர்கள் படுகாயம் அடைந்த ரேக்காவை மீட்டு, அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது இது தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அரியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கார் ஓட்டி வந்த ஓட்டுநர் மது அருந்தி இருந்தாரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.